பெரிய திருமொழிப் பாசுரங்கள் தொகுப்பு - PTM2
உலவுதிரையும் குலவரையும்* ஊழிமுதலா எண்திக்கும்*
நிலவும்சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றிவிறலாழி வலவன்*
வானோர் தம்பெருமான்* மருவாவரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம்சூழ்ந்தழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே. 1.5.3
திருமங்கையாழ்வார் 'சகலமும் பரந்தாமனே' என்கிறார் இப்பாசுரத்தில் !
அலைகடல்களிலும், பெருமலைகளிலும், காலத்திலும், எண்திசைகளிலும், நிலவிலும், சூரியனிலும்,
இருளிலும், இவ்வாறாக எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக உறைந்து நிற்பவனும், பகைவரை வெற்றி கொள்ள தன் திருக்கைகளில் திருச்சக்கரத்தையும், சங்கையும் ஏந்தியவனும், வானவர்களின் தலைவனான தேவாதி தேவனும், கொடுஞ்செயல் புரியும் அசுரர்க்கு எப்போதும் எதிரியாக இருப்பவனும் ஆன பரந்தாமன் புண்ணிய நீர் சூழ்ந்த, அழகான சாளக்கிராமத்தில் எழுந்தருளி உள்ளான் ! அவ்விடம் அடைந்து அப்பரமனை பற்றிடு என் நெஞ்சமே !
****************************
சூதினைப்பெருக்கிக் களவினைத் துணிந்து* சுரிகுழல் மடந்தையர்திறத்து*
காதலேமிகுத்துக்கண்டவா* திரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கிநடுங்கினேன்* வேலைவெண்திரை அலமரக்கடைந்த நாதனே*
வந்துஉன் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.3
தனது கடந்த கால வாழ்க்கையை எண்ணி மிக்க துயரம் கொள்கிறார், இப்பாசுரத்தில் !
ஆகாத தந்திரங்களைக் கைகொண்டு, களவுத் தொழில் செய்து, அழகிய கூந்தல் கொண்ட பெண்டிர் பின் (சிற்றின்பம் வேண்டி) அலைந்து, பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நான், செய்த தீவினைகளின் பலனாக, நரகத்தில் யமதூதர்கள் எனக்குச் செய்யவிருக்கும் கொடிய வேதனைகளை எண்ணி ஒடுங்கி நடுங்கினேன் !
திருப்பாற்கடல் கடைந்த எம்பெருமானே, நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையே, உன் திருவடிகளே காப்பு என்று உன்னைச் சரணடைந்தேனே !
************************
பள்ளியாவது பாற்கடல்அரங்கம்* இரங்கவன்பேய்முலை*
பிள்ளையாய்உயிருண்ட எந்தை* பிரானவன் பெருகுமிடம்*
வெள்ளியான் கரியான்* மணிநிறவண்ணன் என்றெண்ணி*
நாடொறும் தெள்ளியார்வணங்கும்மலை* திருவேங்கடம் அடைநெஞ்சமே. 1.8.2
இப்பாசுரத்தில் திருமங்கை மன்னனின் பக்திப் பேருவகை பிரவாகமாய் வெளிப்பட்டுள்ளது !
திருவரங்கத்திலும் திருப்பாற்கடலிலும் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஆயர்பாடியில் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில், தன்னைக் கொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்ற அரக்கியின் நச்சு முலையில் பால் குடித்து அவளது உயிர் குடித்தவனும் ஆன எம்பெருமான் திருவேங்கடத்தில் வியாபித்து நிற்கிறான் ! "பிரகாசமானவனே, அழகான கருமேனி கொண்டவனே, நீலமணி நிறத்துடைய அழகனே" என்று ஞானத்தெளிவு பெற்ற அடியவர், நாளெல்லாம போற்றி வணங்கும் அவ்வெம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமலை அடைந்து அவன் திருவடிகளை பற்றிடு என் நெஞ்சமே !
************************
குலந்தானெத்தனையும்* பிறந்தே இறந்தெய்த்தொழிந்தேன்*
நலந்தான்ஒன்றுமிலேன்* நல்லதோர்அறம்செய்துமிலேன்*
நிலம்தோய் நீள்முகில்சேர்* நெறியார் திருவேங்கடவா.*
அலந்தேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.4
இனி ஓர் பிறப்பு இல்லாவண்ணம் தன்னை ஆட்கொள்ளுமாறு பரமனை வேண்டுகிறார், இப்பாசுரத்தில் !
இப்பிறப்புக்கு முன், மனிதன், விலங்கு, பறவை என்று பலவகையான பிறப்புகள் நான் எடுத்து, வாழ்ந்து மரித்திருக்கிறேன். அப்பிறப்புகளிலெல்லாம் நல்வினைகள் ஏதும் நான் செய்ததில்லை ! பெரிய கருமேகங்கள் நிலத்தில் தவழ்ந்து ஓய்வெடுக்கும் திருவேங்கட மலையில் வாழும் பிரானே !
பல துயரங்களையும் வேதனைகளையும் அனுபவித்து, அலைந்து திரிந்து, நின்னையே கதியென்று உன் திருவடி நாடி வந்துள்ளேன், என்னை ஆட்கொண்டு அருள்வாயாக !
***********************
பற்றேல் ஒன்றுமிலேன்* பாவமேசெய்து பாவியானேன்*
மற்றேல் ஒன்றரியேன்* மாயனே. எங்கள்மாதவனே.*
கல்தேன் பாய்ந்தொழுகும்* கமலச்சுனை வேங்கடவா.,
அற்றேன் வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.9
பரந்தாமனை விட்டால், தனக்கு வேறு கதியில்லை என்கிறார் , இப்பாசுரத்தில் !
உன் திருவடியையைப் பற்றுவது விடுத்து எனக்கு வேறு மார்க்கமில்லை ! நான் பாவம் மேல் பாவம் பல செய்து பாவியானவன். உன்னைத் தவிர புகல் மற்றொன்று நான் அறியேன் ! உணர்வதற்கரிய மாயவனே ! திருமகளின் மணாளனான எங்கள் மாதவனே !
மலையின் உயரங்களிலிருந்து உருண்டோடி வரும் தேன் கலந்ததால் சுவை கூடிய நீர் நிரம்பிய, தாமரை பூத்த தடாகங்கள் நிறைந்த திருவேங்கடமலை வாழ் எம்பெருமானே ! உன் திருவடிகள் மட்டுமே காப்பு என்று உன்னிடம் சரணடைந்த என்னை ஏற்று எனக்கருள்வாயாக !
*******************************************
1064@
திங்களப்பு வானெரிகாலாகி* திசைமுகனார்*
தங்களப்பன் சாமியப்பன்* பாகத்திருந்த *
வண்டுண் தொங்கலப்பு நீண்முடியான்* சூழ்கழல் சூடநின்ற*
எங்களப்பன் எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே* 2.2.7
சந்திரன், பஞ்சபூதங்கள் ஆகியவற்றில் அந்தர்யாமியாகத் திகழ்பவனும், பிரம்மனின் தந்தையும், சாமவேத நாயகனும் ஆவான் எங்கள் எம்பெருமான் ! த்ரிவிக்ரமனாக, தன் திருவடிகளால் எம்பெருமான் அண்டத்தை அளந்த காலத்தில், அவனது திருவடிகளில் பிரம்மன் இட்ட நீரானது, புனித கங்கை நதியாக பெருக்கெடுக்க, சிவபெருமான் அவளை (கங்கை) தன் சடைமுடியில் ஏற்றுக் கொண்டான் ! அப்பேர்ப்பட்ட என் தந்தை, ஒப்பில்லா என் பெருமான், திருவள்ளூரில் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறான் !
****************************
1065@
முனிவன் மூர்த்தி மூவராகி* வேதம் விரித்துரைத்த புனிதன்*
பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*
தனியன் சேயன் தானொருவனாகிலும்* தன்னடியார்க்கு இனியன் *
எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே. 2.2.8
இப்பாசுரத்தில், திருமங்கை மன்னன், பக்திப் பேருவகையில், பெருமாளை எப்படி வியந்து போற்றிப் பாடியிருக்கிறார் என்று பாருங்கள் !!! இதற்கு பொருள் என்று ஒன்றை எழுதுவது தேவையில்லை என்றாலும், ஏதோ எழுதியிருக்கிறேன் !
பிரம்மனையும், சிவனையும் படைத்து மூவர் ஆனவனும், வேதத்தின் சாரத்தை பகவத்கீதையாக உபதேசித்த ஸ்ரீகிருஷ்ணனும், காயாமலர் நிறங்கொண்ட என் அண்ணலும், தர்மத்தின் நாயகனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனும், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவனும், உணர்வதற்கரிய பரம்பொருளும், ஒப்பாரில் சுவாமியும், ஆக இருந்தும், தன் அடியார்களுக்கு இனியவனும், எளியவனும் ஆன என்னப்பன், எம்பெருமான், திருவள்ளூரில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஆட்சி புரிகிறான் !
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 290 ***
1 மறுமொழிகள்:
Test comment !
Post a Comment